வேலூர், ஜூலை 14:வேலூர் தோட்டப்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் டி.என்.தேசோமயம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இப்பள்ளியில் மாநகராட்சி ஆணையர் சீனிஅஜ்மல்கான் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சத்துணவுக் கூடத்தில் வருகை பதிவேடு, இதர பதிவேடுகள் காணப்படவில்லையாம். இருப்பு வைக்கும் அறைக்கு பூட்டும் இல்லையாம்.
இதுதொடர்பாக சத்துணவு அமைப்பாளர் டி.என்.தேசோமயத்தை விசாரித்தபோது, பதிவேடுகளை வீட்டில் வைத்திருப்பதாக கூறினாராம்.
மேலும், மாணவியருக்கு சமைக்கப்பட்டிருந்த உணவு, வழங்கப்படவிருந்த முட்டைகளை ஆய்வு செய்தபோது 233 முட்டைகள் இருந்தன.
ஆனால் இச்சத்துணவு கூடத்துக்கு 480 முட்டைகள் வழங்குவதுபோல் பதிவேடுகள் இருந்தன.
அதையடுத்து, அமைப்பாளர் தேசோமயத்தை ஆணையர் உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கெனவே
சஸ்பெண்ட் ஆனவர்!
இந்த அமைப்பாளர் முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டு அண்மையில் மீண்டும் பணியில் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.