திருவண்ணாமலை, ஜூலை 14: மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்துக்காக கடந்த 5 ஆண்டுகளாக சகோதரிகள் காத்திருக்கின்றனர்.
தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ளது போந்தை கிராமம். அங்கு முடிதிருத்தும் தொழிலாளியாக உள்ள கண்ணன் மகள்கள் பச்சையம்மாள் (20), ஜோதி (25). சகோதரிகள் இருவரும் ஊனமுற்றவர்கள். இருவராலும் சரிவர நடக்க முடியாது, பேச முடியாது. மேலும் தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். ஜோதிக்கும், பச்சையம்மாளுக்கும் முறையே 80, 50 சதவீதம் ஊனத்தின் தன்மை உள்ளது என மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர்.
இளம் வயதிலேயே தாயை இழந்து விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக தந்தையின் ஆதரவும் சரிவர கிடைப்பதில்லையாம். எந்த வித வருவாயும் ஈட்ட வழி இல்லாமல் உள்ள இருவரும் கிராமத்தில் அக்கம் பக்கத்தினர் தரும் உணவையே உண்டு வாழ்கின்றனர்.
தாங்கள் கெüரவமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த 2007-ம் ஆண்டு முதலே சகோதரிகள் இருவரும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளனர்.
ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் ஓய்வூதியம் பெற்றுத் தரப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
ஜோதி, பச்சையம்மாள் சகோதரிகளால் எந்த வேலையும் செய்ய முடியாது. இதனால் கடந்த 2007-ம் ஆண்டு முதலே ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர். ஆனால் வருவாய்த் துறையினரின் அலட்சியத்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ஊனத்தின் தன்மையைக் கருதியும், குடும்பச் சூழலை கருத்தில் கொண்டும் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலையிட்டு சகோதரிகளுக்கு ஓய்வூதியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.