வேலூர், ஜூலை 14:வேலூர், ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில் ஆடிக் கிருத்திகைக்கு எதிர்நோக்கப்படும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை முனைப்புடன் செயல்படுத்தி தர வேண்டும் என்று அதிகாரிகளை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் பி. ஜெகன்னாதன் கேட்டுக் கொண்டார்.
இக்கோவில் மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தில், ஆடிக் கிருத்திகை பெருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பது குறித்த பல்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் இருந்து சிறப்பு பஸ் தேவை
கோவில் நிர்வாகத்தின் சார்பில் பேசிய முக்கிய பிரமுகர்கள், ரத்தினகிரி கோவிலுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விட வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வைக்கப்படும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.
சுகாதாரம்
சுகாதாரத் துறையினர் போதுமான அளவில் தாற்காலிக கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். ஆண்டுதோறும் திருவிழாவின்போது மட்டுமே சுகாதாரத் துறை துப்புரவுப் பணியில் கவனம் செலுத்துகிறது. விழா முடிந்த நிலையில், சுற்றுப்பகுதியில் வீசப்படும்ல கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதைக் கருத்தில்கொண்டு விழா முடிந்த பிறகு கோவில் வளாகத்தை சுற்றிலும் தூய்மைப் பணி செய்து தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
நிறைவாக, சார் ஆட்சியர் ஜெகன்னாதன் பேசியது:
முந்தைய காலங்களில் பக்தர்கள் அரசிடமோ, கோவில் நிர்வாகத்திடமோ எதிர்பார்ப்பு இன்றி சென்று வந்தனர். இன்றைக்கு அந்நிலை மாறியுள்ளது. நிர்வாகம், அரசிடம் இருந்து பக்தர்கள் வசதிகளை எதிர்நோக்குகின்றனர். இதை நிறைவேற்றித் தருவது அரசு மற்றும் நிர்வாகத்தின் கடமை.
அலுவலர்கள் தாங்கள் இந்த கோவிலுக்கு வரும்போது, என்னென்ன அடிப்படை வசதிகளை எதிர்நோக்கி வருவீர்களோ, அந்த வசதிகளை பக்தர்களுக்கு நல்ல முறையில் செய்து தர வேண்டும்.
சட்டம், ஒழுங்கை போலீஸôர் பராமரிக்க ஏதுவாக, இப்பகுதியில் ஏலம் விடப்படும் கடைகளுக்கு அடையாள அட்டை வழங்குவது, பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல ஏதுவான இடத்தை ஒதுக்குவது போன்றவற்றை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும்.
மகளிர் சுயஉதவிக் குழுவினர் திருவிழாவின்போது கடைகள் அமைப்பதற்கு உரிய அனுமதியை கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும். சென்னையில் இருந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பு பஸ்கள் வந்து சென்றுள்ள நிலையில், மீண்டும் சென்னையில் இருந்து அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜெகன்னாதன்.
பாலமுருகனடிமை சுவாமிகள், டிஎஸ்பி லாவண்யா, இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் கே.பி. அசோக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரசன்னா, வட்டாட்சியர் கோ. சிங்காரம், தீயணைப்பு அலுவலர் பி. முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.