செய்யாறு, ஜூலை 14: செய்யாறு அருகே பெண்ணிடம் வரதட்சிணைக் கேட்டு வீட்டை விட்டுத் துரத்தியதாக கணவர் மற்றும் மாமனாரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
செய்யாறு வட்டம் இருங்கல் கிராம காலனியைச் சேர்ந்தவர் கௌசல்யா (19). இவர் நர்சிங் டிப்ளமோ படித்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒயர்மேன் பிரபானந்தன் என்பவரை காதலித்து வந்ததில் கர்ப்பமானதாகத் தெரிகிறது.
இதையடுத்து இருவருக்கும் 16.4.11-ம் தேதியில் திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கௌசல்யாவை வரதட்சிணைக் கேட்டு, தராததால் வீட்டை விட்டு அனுப்பி விட்டார்களாம். தாய்வீட்டில் கௌசல்யாவுக்கு 1.5.11-ம் தேதி குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க கணவர் வீட்டில் இருந்து யாரும் வராததால் 13.7.11-ம் தேதி, குழந்தையுடன் கணவர் பிரபானந்தன் வீட்டுக்கு கௌசல்யா வந்துள்ளார். ஆனால் வரதட்சிணயை கொண்டுவராமல் வீட்டுக்கு வரவேண்டாம் எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனராம்.
இது குறித்து கௌசல்யா அளித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸôர் வழக்குப் பதிந்து கணவர் பிரபானாந்தன் (23), மாமனார் வேலு (52) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.