குடியாத்தம், ஜூலை 14: குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய முன்னேற்றத் திட்டம் சார்பில் 40 பேருக்கு இலவச வீட்டு ஒயரிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களுக்குச் சான்றிதழ்களை கல்லூரித் தலைவர் ஆர்.ஜே. குமார் புதன்கிழமை வழங்கினார். பணிமனை கண்காணிப்பாளர் ஜி. இளங்கோவன், திட்ட ஆலோசகர் கே. கார்த்திகைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதியவர் கண்தானம்
குடியாத்தம் கணபதி நகரைச் சேர்ந்த சண்முகம் (70), புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன.
அவரது மகன் சரவணனின் சம்மதத்தின்பேரில், ரோட்டரி சங்க கண்தான பொறுப்பாளர் என்.எஸ். மணி வழிகாட்டுதல்படி, வேலூர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் வந்து கண்களை அகற்றி தானமாக எடுத்துச் சென்றனர்.
நாளை வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்
கே.வி. குப்பம் வரதராஜ பெருமாள் கோவிலில், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு வரும் சனிக்கிழமை திருக் கல்யாணம் நடைபெறுகிறது.
அறிவியல் தொழில்நுட்பக் கருத்தரங்கம்
குடியாத்தம் சூரியோதயா தொடக்கக் பள்ளியில் அறிவியல் தொழில்நுட்பக் கருத்தரங்கம் மற்றும் உலக மக்கள் தொகை தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தாளாளர் பிலிப் பக்தபிரசன்னா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெனீப்பர் பிலிப் வரவேற்றார்.
காவல் ஆய்வாளர் ஜி. சீனிவாசன், இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப அலுவலர் பி. கல்யாணசுந்தரம், ஆசிரியர் எம். சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.