அரக்கோணம், ஜூலை 23: அரக்கோணம் நகரில் குடிநீர் மெயின் குழாய்களில் நகராட்சி அனுமதி இல்லாமல் பலர் இணைப்புகளை பொருத்தியுள்ளதாக நகராட்சி பொருத்துநர் பழனி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவனூர் ரோட்டில் குடியிருக்கும் 3 பேர் மீது நகராட்சி ஆணையர் ராஜவிஜயகாமராஜ் அளித்த புகாரின்பேரில், நகர போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
செல்போன் டவர் பேட்டரி திருட்டு: இளைஞர் கைது
வாலாஜாபேட்டை,ஜூலை 23: ஆர்க்காட்டை அடுத்த வேப்பூரில் தனியார் செல்போன் டவரில் 24 பேட்டரிகள் அண்மையில் திருடு போனதாம். புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் வழக்குப் பதிந்து, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரனை (28) கைது செய்தனர்.
தீப்பெட்டித் தொழிற்சாலையில் ரகளை: இளைஞர் கைது
குடியாத்தம், ஜூலை 23: குடியாத்தம் அடுத்த புவனேஸ்வரிபேட்டையில் வேணுகோபால் (42) என்பவர் நடத்திவரும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை போடிப்பேட்டையைச் சேர்ந்த துரையின் மகன் சந்தோஷ்குமார் (22) (படம்) குடிபோதையில் நுழைந்து, அங்கிருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். பின்னர் தொழிலாளர்களையும் சிலரையும் தாக்கினாராம்.
புகாரின்பேரில் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஜி. சீனிவாசன் வழக்குப் பதிந்து, சந்தோஷ்குமாரை சனிக்கிழமை கைது செய்தார்.
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் கூட்ரோடில் உள்ள அன்னை மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம், அம்மன் கழுத்தில் இருந்த நகைகள், வெள்ளியால் ஆன பூஜை சாமான்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனராம். நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
பேர்ணாம்பட்டு அடுத்த மதினாப்பள்ளி ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வட்டாட்சியர் கே. பத்மினி, மண்டல துணை வட்டாட்சியர் பட்டுரோஸ், வருவாய் ஆய்வாளர் மகாலிங்கம் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு இவற்றை பறிமுதல் செய்து, பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
லாரிகள் மோதல்: ரூ.2 லட்சம் முட்டைகள் சேதம்
ஆம்பூர், ஜூலை 23: நாமக்கல்லிருந்து முட்டைகளை ஏற்றிக் கொண்டு சித்தூரை நோக்கி சனிக்கிழமை ஒரு லாரி சென்றது. ஆம்பூர் அருகே விண்ணமங்களம் கிராமத்தில் பழுதடைந்து நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த முட்டை லாரி மோதியதாம்.
இதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமடைந்தன. விபத்தில் முட்டை லாரியின் கிளீனர் சித்தூரைச் சேர்ந்த நாதமுனி (43) காயம் அடைந்தார். டிரைவர் தலைமறைவானார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.