திருவண்ணாமலை, ஜூலை 23: திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாய்ஸ் கிளப் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சாமுண்டீஸ்வரி கூறினார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை மேலும் கூறியது: திருவண்ணாமலையில் ஏற்கெனவே பாய்ஸ் கிளப் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்டோர் பாய்ஸ் கிளப்புகளில் உள்ளனர். அதன் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை சேர்க்க உள்ளோம்.
இளைஞர்கள் சிறிய வயதிலேயே தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி போட்டிகள் நடத்தப்படும்.
திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி உட்கோட்டங்களில் பாய்ஸ் கிளப்புக்கு தனியாக இடம் தரப்படும்.
50 சவரன் நகைகள் ஒப்படைப்பு
வடக்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் களவுபோன 50 சவரன் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கீழ்பாலூர் திருட்டு சம்பவம், ஆரணி சம்பவம் உள்ளிட்டவை தொடர்பான நகைகள் மீட்கப்பட்டன.
மேலும் தானிப்பாடி, கலசபாக்கம் கொலைகளில் துப்பு துலக்கிய காவல் துறையினருக்கு வெகுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு மருத்துவ முகாம்
அனைத்து உட்கோட்டங்களையும் சேர்ந்த காவலர்கள், அவர்தம் குடும்பங்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக திருவண்ணாமலையில், மகா தீபம் அரிமா சங்கத்துடன் சேர்ந்து விடிஎஸ் பள்ளியில் காவலர் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என்றார் சாமுண்டீஸ்வரி.