தருமபுரி, ஜூலை 23: சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 86-வது நினைவுநாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., மகாகவி பாரதி ஆகியோரின் நெருங்கியத் தோழனாக விளங்கிய சுப்பிரமணிய சிவா, ஆங்கிலேயருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். வ.உ.சி. உடன் கோவை சிறையிலும் இருந்துள்ளார்.
ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்த போது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என்.தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.
தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு "பாரதபுரம்' என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார்.
பாரதபுரத்தில், பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், மகாத்மா காந்தியை அழைத்து வந்து அதற்கு அடிக்கல் நாட்ட எண்ணினார். ஆனால், கோல்காத்தாவை சேர்ந்த மூத்த தொழிற்சங்கவாதி சித்தரஞ்சன்தாûஸ அழைத்து வந்து 23.1.1923-ல் அடிக்கல் நாட்டினார்.
தமிழகம் முழுவதும் பயணம் செய்து, ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதைக் காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக் கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இருப்பினும், கட்டை வண்டியிலும், நடைப்பயணமாகவும் ஊர், ஊராகச் சென்று சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார்.
22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இறந்தார்.
பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் கடந்த வாரம் திறந்துவைத்தார்.
இந்நிலையில், அவரது 86-வது நினைவு நாள் பாப்பாரப்பட்டியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி, தியாகி சிவாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ண ஆசிரமத் தலைவர் ரமாநந்தா, செயலாளர் கிருஷ்ணன், விவேகானந்தர் அறக்கட்டளைத் தலைவர் பி.என்.குருராவ், தியாகி ஏ.பஞ்சாட்சரம், சிவா பேரவை அமைப்பாளர் விஸ்வநாதன் மற்றும் பரம்வீர் பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் பாப்பாரப்பட்டியிலிருந்து ஊர்வலமாகச் சென்று அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மணிமண்டபத்தில் தியாகி சுப்பிரமணிய சிவாவின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், அவரது அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை அரசு நிறுவ வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.