வந்தவாசி, ஜூலை 23: பணியின்போது இறந்த கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் வந்தவாசி வட்ட பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய கிராம உதவியாளர்களுக்கு உடனடியாக பணிப் பதிவேடு தொடங்க வேண்டும், நிலவரி வசூல் செய்த கிராம உதவியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கியது போல் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும், அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் பணிப் பதிவேட்டில் ஈட்டிய விடுப்பை ஆண்டுக்கு 30 நாள்கள் என திருத்தம் செய்து தருமாறு வட்டாட்சியரை கேட்டுக் கொள்வது, பணியிலிருந்து ஓய்வுபெறும் கிராம உதவியாளர்களுக்கு பணிநிறைவு நாளன்றே ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
வட்ட தலைவர் சி.சின்னப்பையன் தலைமை வகித்தார். வட்டச் செயலர் வெங்கடேசன் வரவேற்றார். ஓய்வுபெற்ற வட்டாட்சியர் எம்.முருகேசன், கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வந்தவாசி உள்வட்ட தலைவர் எம்.பிரபாகரன் நன்றி கூறினார்.