செய்யாறு, ஜூலை 23: செய்யாறில் பள்ளி மாணவிகளை கேமராவில் படம் பிடித்த டியூஷன் மாஸ்டர் செந்தில்குமார் (33) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
செய்யாறு வழூர்ப்பேட்டை பழைய மசூதித் தெருவில் வசிப்பவர் செந்தில்குமார். இவர் இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரிடம் டியூஷன் படித்த பள்ளி மாணவிகள் சிலர் தற்போது வேறு ஆசிரியரிடம் டியூஷன் படிக்கிறார்களாம்.
இதனால் ஆத்திரமுற்ற செந்தில்குமார், சனிக்கிழமை காலை வேறிடத்தில் டியூஷன் சென்று திரும்பிக் கொண்டிருந்த மாணவிகள் சிலரை தவறான நோக்கத்தில் கேமராவில் படம் பிடித்தாராம்.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் செந்தில்குமாரை அணுகி கேட்டபோது, அவர்களிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் உதவி ஆய்வாளர் பி.சுந்தரராஜ் வழக்குப் பதிவு செய்து டியூஷன் மாஸ்டர் செந்தில்குமாரை கைது செய்தார்.