செங்கம், ஜூலை 30: செங்கம் அருகேயுள்ள பக்கிரிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட பக்கிரிபாளையம்புதூர் ஏரியிலிருந்து 10 டன் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏரியில் உள்ள காடு மரம், கருவேல மரம், முள்வேலி மரங்கள் வெட்ட ஊராட்சி சார்பில் அண்மையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனை பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் மணி ரூ.1.15 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், ஏரியில் அத்துமீறி பலர் நுழைந்து மரம் வெட்டிச் சென்றுள்ளது சனிக்கிழமை தெரியவந்தது.
தகவலின்பேரில் ஆணையாளர் பரிதிமால்,துணை தாசில்தார் நித்யானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக பக்கிரிபாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், செல்வராஜ், பழனி, குப்புசாமி, சேட்டு உள்பட 50 பேர் மீது கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் மேல்செங்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.