பவானி, பிப். 10: பவானியை அடுத்த பர்கூர் வனப் பகுதியில் யானை வழிமறித்த ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
பர்கூர் தாளக்கரை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாதேவன் (30). மனைவி பார்வதி (25). நிறைமாதக் கர்ப்பிணியான பார்வதிக்கு, வியாழக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தாளக்கரை சென்று, பார்வதியை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை அந்தியூர் திரும்பிக் கொண்டிருந்தது.
தாளக்கரையிலிருந்து அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்றபோது, வழியில் யானை நின்று கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் சக்திவேல், ஆம்புலன்ûஸ நிறுத்தி, ஹாரனை ஒலித்தார். முகப்பு விளக்கைத் தொடர்ந்து அணைத்து, அணைத்து ஒளிரவிட்டும் யானை நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது.
பிரசவ வலியால் துடிக்கும் பார்வதி ஒருபுறம், மருத்துவமனைக்குச் செல்ல வழிவிடாமல் நிற்கும் காட்டு யானை மற்றொரு புறம் என ஆம்புலன்ஸில் வந்த டிரைவர், மருத்துவ உதவியாளர் மற்றும் பார்வதியின் உறவினர்கள் செய்வதறியாது பரிதவித்தனர்.
யானையின் கண்ணில் படாமல் வாகனத்தில் பின்னோக்கிச் சென்றுவிட்டால், யானை சென்றுவிடும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் பின்னோக்கி சென்றபோது பார்வதிக்கு பிரவச வலி அதிகரித்தது. அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் சிவக்குமார் பிரசவம் பார்த்தார். பார்வதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
சுமார் ஒரு மணி நேரம் நடுக்காட்டில் தவித்த இவர்கள், யானை வழியிலிருந்து வெளியேறிச் சென்ற பின்னரே அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.