செய்யாறு, பிப்.10: சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில் செய்யாறு அருகே கல்குவாரியில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 42 தொழிலாளர்களை வருவாய்த்துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர். கல்குவாரி உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையைச் சேர்ந்த இன்டர்நேஷனல் ஜஸ்டீஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனம், செய்யாறு அருகே சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் ராஜகோபால் என்ற பெயரில் இயங்கிவரும் கல்குவாரியில் கடந்த 5 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வரும் 42 தொழிலாளர்களை மீட்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், செய்யாறு கோட்டாட்சியர் கா.பிரியா தலைமையில், வட்டாட்சியர் நா.விஸ்வநாதன், சமுகப் பாதுகாப்பு நலத்துறை தனி வட்டாட்சியர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மங்கையரசி மற்றும் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்குச் சென்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு, முன்பணம் பெற்றுக் கொண்டு இப்போது வாரம் ரூ.100 மட்டுமே கூலியாகப் பெற்றுக் கொண்டு கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தொழுப்பேடு அடுத்த பெரும்பேடுகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 21 பெண்கள் உள்ளிட்ட 42 பேரையும் மீட்டனர். அவர்களுக்கு செய்யாறு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசு சார்பில் இவர்கள் அனைவருக்கும் விடுதலைச் செய்யப்பட்டதற்கான விடுதலைப் பத்திரமும், சமுக நலப் பாதுகாப்புத்துறை சார்பில் 31 பேருக்கும் தலா ரூ.1000 வீதம் நிவாரணமும் வழங்கப்பட்டது.
தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்டி கிர்பத் தலைமையிலான குழுவினர் மீட்கப்பட்ட தொழிலாளர்களை அவர்களின் சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று விட்டனர்.
கல்குவாரியின் உரிமையாளர் சந்திரசேகரிடம் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.