ஆரணி, பிப். 10: ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 7 வழக்குகளுக்கு சாட்சி சொல்ல வராததால் காஞ்சிபுரம் ஆய்வாளர் நந்தகுமாருக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி பிடி ஆணை உத்தரவு பிறப்பித்தார்.
ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் நந்தகுமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். அப்போது சில வழக்குகளை அவர் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் நந்தகுமார் பதவி உயர்வு பெற்று இப்போது காஞ்சிபுரத்தில் ஆய்வாளராகப் (குற்றப்பிரிவு) பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 7 வழக்குகளுக்கு பல முறை சாட்சி கூற அவர் வரவில்லையாம். இதனால் குற்றவியல் நடுவர் தஸ்நீம், வெள்ளிக்கிழமை காவல் ஆய்வாளர் நந்தகுமாருக்குப் பிடி ஆணை உத்தரவினைப் பிறப்பித்தார்.