வேலூர், பிப். 10: நகைக் கடையில் திருடிய 3 பெண்களுக்கு வேலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
கர்நாடக மாநிலம், பெங்களூர் தர்கமூலா பகுதியை சேர்ந்த காசிம் என்பவரின் மனைவி பாபிதா (40). அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜமீலின் மனைவி ஜபினா (30), ரியாஸின் மனைவி அமினா பானு என்ற சாயினா (40).
இவர்கள் மூவரும் கடந்த 1-7-2010 அன்று வேலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 27 கிராம் எடையுள்ள மூன்று செட் வளையல்களை திருடினராம். மூவரையும் கையும் களவுமாக பிடித்த நகைக் கடை ஊழியர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸôர் அவர்களை கைதுசெய்தனர்.
இதுகுறித்த வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர்மன்றம் எண்-4-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஜோதி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.