அரக்கோணம், பிப். 10: அரக்கோணம் அருகே நூறுநாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி தரக்கோரி வெள்ளிக்கிழமை பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
நெமிலி ஒன்றியம் பரமேஸ்வரமங்கலம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வாரத்தில் சில நாள்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறதாம்.
இந்நிலையில் கூடுதல் நாள்களுக்கு பணி வழங்கக் கோரி பரமேஸ்வரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பெண்கள், அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் தக்கோலம் கூட்டுரோடு அருகே வெள்ளிக்கிழமை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
தகவல் அறிந்த அரக்கோணம் டிஎஸ்பி சீத்தாராம், நெமிலி ஒன்றிய ஆணையர் சீனிவாசன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று பேச்சு நடத்தினர்.
கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.