வேலூர், பிப். 10: வரி செலுத்தாத தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அஜய் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் அஜய் யாதவ் தலைமை வகித்தார். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவைப்படும் மணல் மற்றும் கட்டுக்கல்லினை வண்டியில் ஏற்றிச் செல்லும்போது வருவாய்த் துறை மூலம் தடுக்கப்படுவதாக இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆட்சியர் கூறியது: வண்டி ஓட்டுபவரிடம் பணிக்கான ஆணையை கொடுத்து சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலருக்கு தகவல் அளிக்கவேண்டும்.
"தாய்' திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தேர்வுசெய்து இம்மாதம் 16ஆம் தேதிக்குள் டெண்டர் விடவேண்டும்.
29ஆம் தேதி முதல்வர் திறக்கவுள்ள பசுமை வீடுகளை 25ஆம் தேதிக்குள் முழுமையாக கட்டி முடிக்கவேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் முழுமையாக நடைபெற வேண்டும்.
மேலும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு பணிகள் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். மாவட்டத்தில் வரி செலுத்தாத தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.