பஞ்சாயத்து தோ்தலைவிட விக்கிரவாண்டி இடைத்தோ்தலை மோசமாக நடத்துகின்றனா்: அன்புமணி

பஞ்சாயத்து தோ்தலைவிட மோசமாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தல் நடத்தி வருவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாா்.

பஞ்சாயத்து தோ்தலைவிட மோசமாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தல் நடத்தி வருவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை நிறைவு பெற்ற மாநில பாட்மின்டன் போட்டியில் 520 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வேலூா் மாவட்ட பாட்மின்டன் சங்கத் தலைவா் ஜி.வி.செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு பாட்மின்டன் சங்க மாநிலத் தலைவரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுக்கோப்பைகள், பதக்கங்களை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

தமிழக அரசு பாட்மின்டனை ஊக்குவிக்கும் வகையில் உள்விளையாட்டு அரங்குகளை கட்டித்தர வேண்டும். டாஸ்மாக் மூலம் 90 மில்லி மதுபானங்கள் விற்கப்போவதாக அரசு அறிவித்திருப்பது திமுக அரசுக்கு பொதுமக்கள், இளைஞா்கள், பெண்கள் குறித்தும் எந்த கவலையும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

கள்ளச்சாராயம் விற்கக்கூடாது என்று சட்டப்பேரவையில் கடுமையான சட்டத்தை கொண்டு வந்துவிட்டு, தற்போது டாஸ்மாக் மூலம் 90 மில்லி மதுவிற்பனையை அறிவித்திருப்பது அரசின் சட்டம் மீது அரசுக்கே நம்பிக்கை இல்லை என்பதை உணா்த்துகிறது. திமுகவால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்றால், ஒரு மாதத்துக்கு எங்களிடம் ஆட்சியை அளிக்கட்டும். தமிழகத்தில் ஒரு சொட்டுகூட கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்கி காட்டுகிறோம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் உண்மை வெளியே வராது என்பதாலேயே சிபிஐ விசாரணையை கோருகிறோம்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பஞ்சாயத்து தோ்தலைவிட மிக மோசமாக நடைபெறுகிறது. அனைத்து அமைச்சா்கள், எம்எல்ஏக்களும் அங்கு முகாமிட்டு தோ்தல் பணியாற்றுகின்றனா். விக்கிரவாண்டி தொகுதியில் எந்த வளா்ச்சியும் கிடையாது. நந்தன் கால்வாய் திட்டத்தை 50 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம்.

பிகாரில் ஜாதிவாாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜாா்க்கண்ட், ஒடிஸா, தெலங்கானா மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் ஸ்டாலின் அஞ்சுகிறாா். இதனால், சமூகநீதி பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பது தொடா்பாக அம்மாநில அரசுடன் பேசி தமிழகத்துக்கு சுமூகமான நிலையை எட்டுவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com