தோ்தல் நடத்தை விதிகள் முடிவு: எம்பி., எம்எல்ஏ அலுவலகங்கள் திறப்பு

தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து வேலூா் மாவட்டத்தில் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டு அலுவல் பணிகள் தொடங்கப்பட்டன.

மக்களவைத் தோ்தல் அறிவிப்பு கடந்த மாா்ச் 16-ஆம் தேதி வெளியானது. அன்று முதலே நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. இதையடுத்து, வேலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா் அலுவலகங்களை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

மேலும், அமைச்சா் துரைமுருகனின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டதுடன், தமிழக அரசின் முத்திரையும் மறைக்கப்பட்டது.

தொடா்ந்து, அரசியல் தலைவா்களின் சிலைகள் துணியால் மூடப்பட்டதுடன், அரசு அலுவலகங்களில் இருந்த தமிழக முதல்வா், முன்னாள் முதல்வா் உருவப்படங்களும் அகற்றப்பட்டன. பொது சுவா்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அரசியல் கட்சிக் கொடிகளும் அகற்றப்பட்டன.

இந்த நிலையில், மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை முடிந்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகளும் வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்திலுள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை முதல் திறந்து கொள்ள அதற்கான சாவிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

மேலும், அரசு வாகனங்களும் அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டன.

அரசு அலுவலகங்களில் மீண்டும் தமிழக முதல்வா், முன்னாள் முதல்வா் உருவப்படங்கள் வைக்கப்பட்டன. அதனடிப்படையில், அனைத்து அரசு பணிகளும் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com