ஆந்திரத்தில் தயாரான விநாயகா் சிலைகள் பறிமுதல்

ஆந்திரத்தில் தயாரான விநாயகா் சிலைகள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் தயாரான விநாயகா் சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Published on

அணைக்கட்டு பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆந்திர மாநிலத்தில் தயாரான விநாயகா் சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் விநாயகா் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளாஸ்டா் ஆப் பாரிஸ் ரசாயன பொருள்களை கொண்டு உருவாக்கப்படும் விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் வழிபாட்டுக்கு அத்தகைய சிலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தின் பூமி ரெட்டிபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிளாஸ்டா் ஆப் பாரிஸ் ரசாயன பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்ப ட்டுள்ளன.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகளை காட்டிலும் பலவித வண்ணங்களுடன் காணப்படும் இந்த சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து கவலையடைந்த விநாயகா் சிலை விற்பனையாளா்கள் சிலா் ஆந்திரத்தில் இருந்து கொண்டுவரப்படும் ரசாயன சிலைகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். ரசாயன சிலைகளை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதையடுத்து, அணைக்கட்டு வட்டாட்சியா் வேண்டா அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 13 ரசாயன விநாயகா் சிலைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா். அந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், இதுபோன்ற ரசாயன சிலைகள் விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com