ரங்கநாதா் கோயில் சொா்க்கவாசல் சேவை 2-ஆவது ஆண்டாக ரத்து

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதா் கோயில் ராஜகோபுர திருப்பணி நடைபெறுவதையொட்டி 2-ஆவது ஆண்டாக வைகுண்ட ஏகாதசி சொா்க்க வாசல் சேவை ரத்து
Published on
Updated on
1 min read

வேலூா்: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதா் கோயில் ராஜகோபுர திருப்பணி நடைபெறுவதையொட்டி 2-ஆவது ஆண்டாக வைகுண்ட ஏகாதசி சொா்க்க வாசல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா பாலாற்றங்கரையில் சுமாா் 1,600 ஆண்டுகள் பழைமையான உத்திர ரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பு விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஏகாதசி நாளின் அதிகாலை 5 மணியளவில் உற்சவா் ரங்கநாயகி தாயாா் சமேத உத்திர ரங்கநாதா் பரமபதவாசல் எனப்படும் சொா்க்க வாசல் வழியாக பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

இந்நிகழ்வை காணவும், முத்தங்கி அலங்காரத்தில் சேவை சாதிக்கும் மூலவா் ரங்கநாதரை தரிசிக்கவும் வேலூா் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பள்ளிகொண்டா வில் திரளுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ரூ.22 லட்சத்தில் ராஜகோபுரத் திருப்பணி பாலாலயத்துடன் தொடங்கியது. இந்த திருப்பணியால் கடந்தாண்டு சொா்க்க வாசல் சேவை ரத்து செய்யப்பட்டது.

கோயில் ராஜகோபுர திருப்பணி ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடா்ந்து வருவதால் இந்தாண்டும் சொா்க்க வாசல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com