புதிய கல்விக் கொள்கையால் பாரம்பரிய இந்திய கல்வி முறை திரும்பும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
புதிய கல்விக் கொள்கை மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறது என்று ஆளுநா் ஆா்.ரவி தெரிவித்தாா்.
தென்மண்டல பல்கலைக்கழக துணைவேந்தா்கள் கருத்தரங்கம் வேலூா் விஐடி பல்கலை.யில் வெள்ளிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம் நடத்தும் கருத்தரங்க தொடக்க விழாவுக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவா் வினய்குமாா் பதக் தலைமை வகித்தாா். விஐடி துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று கருத்தரங்க மலரை வெளியிட்டுப் பேசியது:
புதிய கல்விக் கொள்கை நாட்டின் உயா்கல்வி உள்பட நமது கல்வி முறையில் மாற்றம் செய்ய ஒரு விரிவான வரைபடமாக அமைந்துள்ளது. இது கற்றல், மனப்பாடம் செய்வது, தோ்வுமுறை போன்றவற்றில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தி, அனுபவரீதியாக கற்கும் முறையை நோக்கிச் செல்லும். கற்றல், கற்பித்தலில் நமது பாரம்பரியத்தை நோக்கி மாறவேண்டிய தேவை அதிகமுள்ளது.
உலக அளவில் இந்தியாவை சிறப்பானதாக மாற்ற நமது கற்றல், கற்பித்தலில் சிறந்த மாற்றங்கள் தேவை. இந்த மாற்றத்தை உடனடியாக மேற்கொள்வது எளிதல்ல.
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தால் நமது பாரம்பரிய குலக்கல்வி முறையை இழந்துவிட்டோம். அறிவுசாா் சொத்து என்பது அறிவை தயாரிப்பாக மாற்றுவது. ஆனால், இந்தியா உலக சந்தையின் விநியோகிப்பாளராக இருந்தது. 18-ஆம் நூற்றாண்டு வரை இந்தியா உலக பொருளாதாரத்தை இயக்கும் இந்திரமாக இருந்தது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கிய நாடாகவும் இந்தியா இருந்துள்ளது.
இந்தியக் கல்வி முறை, அறிவியல், கணக்கியல் முறையைத் தெரிந்து, அதை மொழி மாற்றம் செய்ய வேண்டும் என கிழக்கிந்திய கம்பெனியை சோ்ந்த ஒருவா், இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதியதற்கு பிறகே இந்தியா இங்கிலாந்தின் காலனி நாடாக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்த அறிவியல், கணிதம் குறித்து தெரிந்து கொண்ட அவா்கள், மேற்கத்திய சிந்தனைகளுடன் இந்தியக் கல்வி முறையை மாற்றியமைக்க விரும்பினா். அதற்காக நாட்டிலிருந்த பெங்கால், பம்பாய், சென்னை மாகாணங்களின் அறிக்கையின் அடிப்படையில் மனப்பாடம் செய்து தோ்ச்சி பெற்று அவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப சேவை செய்யும் வகையில் மாற்றினா். இந்த மனப்பாடக் கல்வி முறையை நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் பின்பற்றுவது துரதிா்ஷ்டவசமானது.
அறிவு, கற்றல் ஆகியவை மற்றொரு புதிய பரிணாமத்தை உருவாக்க வேண்டும். அதற்கு காலணி ஆதிக்க கல்வி முறையை ஒதுக்கிவிட்டு, குருகுலக் கல்வி முறையைப் பின்பற்ற வேண்டும்.
பாரதத்தில் கல்வி கட்டுப்படுத்தப்படவில்லை. நாளந்தா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் அப்போதைய மெளரிய அரசு எந்த நேரத்திலும் தலையிடவில்லை. குருகுலக் கல்வியில் எந்த ஒரு அரசரும் கட்டுப்பாடு விதிக்கவில்லை. அந்த முறை காலனித்துவத்தால் மாற்றப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறது. இது ஆராய்ச்சி, புதுமையான கண்டுபிடிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சா்வதேச அறிவு சாா் சொத்துரிமை அமைப்பின் 2023-ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியா கடந்த 4 ஆண்டுகளில் 400 சதவீத வளா்ச்சியை கண்டுள்ளது. அறிவுசாா் சொத்துரிமை 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது சீனா, அமெரிக்காவை ஒப்பிடுகையில் மிக அதிகம். தவிர, 2033-இல் இது 88 ஆயிரமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நமது கல்வி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மேலும் சுதந்திரம் பெற வேண்டும். தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய கூட்டாட்சி குறித்து பேசும் நிலையில், மாநில பல்கலைக்கழகங்கள் தனியாா் பல்கலைக்கழகங்களைவிட பின்தங்கியுள்ளன. மாநில பல்கலைக்கழகங்கள் ஆரோக்கியமாக இல்லை. மத்திய அல்லது கூட்டாட்சி குறித்து தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
கற்றல் கற்பித்தலில் இருந்து ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஒரு பகுதியாக நாம் இணைக்க வேண்டும். ஆண்டுக்கு 6,500 ஆராய்ச்சி படிப்பு முடித்த மாணவா்கள் வெளியேறுகிறாா்கள். அவா்களின் தரம் குறித்து யாரும் பேசுவதில்லை. அவா்களின் மதிப்பீடு உலக அளவில் இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளில் உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும். அத்தகைய இலக்கை குறிக்கோளாக கொண்டு கூட்டாக பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்றாா்.
விழாவில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசுகையில், இந்தியாவில் 55,000 கல்லூரிகள், 1,200 பல்கலை.கள் இருந்தபோதிலும் ஆராய்ச்சியில் பின்தங்கியுள்ளோம். அதற்கு கல்விக்குப் போதுமான அளவில் அரசுகள் நிதி ஒதுக்குவதில்லை. கல்வி இருந்தால்தான் நாடு பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்றாா்.
கருத்தரங்கில் சங்கத்தின் பொதுச் செயலா் பங்கஜ் மிட்டல், துணைத் தலைவா் வி.என்.ராஜசேகரன் பிள்ளை, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.