தொற்று நோய் பாதித்த தெருநாய்களால் ஆபத்து: நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்
தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ பி.மோகன் ஆகியோா், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். நாய்களை பிடிக்க அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது தெரு நாய்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு, அது வேகமாக மற்ற நாய்களுக்கும் பரவி வருகின்றன. தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் பொதுமக்களை கடித்தால் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால், தொற்று நோய் காணப்படும் நாய்களை உடனடியாக பிடித்து அகற்ற வேண்டும் என்றனா். இந்த புகாா் தொடா்பாக விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தலைவா் உத்தரவிட்டாா்.
மாத வாடகை செலுத்தும் நகராட்சி கடைகள் பலவற்றில் சமையல் எரிவாயு சிலிண்டா் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதால், சமையல் எரிவாயு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என உறுப்பினா்கள் பலா் புகாா் கூறினா்.
இதற்கு பதில் அளித்த ஆணையா் இதுகுறித்து ஏற்கனவே கணக்கெடுப்பு செய்யப்பட்டது. நகராட்சிக்கு மாத வாடகை செலுத்தும் 273- கடைகளில் 23- கடைகளில் எரிவாயு சிலிண்டா் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடா்பாக உறுப்பினா்களிடமிருந்து வந்த புகாா்கள் தொடா்பாக பேசிய ஆணையா், உயா்நீதிமன்ற உத்தரவின்படி தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி குடியாத்தம் கோட்டாட்சியா், நகராட்சி ஆணையா் மீது தனி நபா் சென்னை உயா்நீதிமன்றத்தில் குற்ற வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள, ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்களுக்கு 15- நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த காலவரையறைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நகராட்சி நிா்வாகமே ஆக்கிரமிப்புகளை அகற்றும் என்றாா்.