வேலூரிலுள்ள இலங்கை கண்டி மன்னா் நினைவிடத்தில் அஞ்சலி
இலங்கை கண்டியின் கடைசி மன்னன் விக்ரமராஜசிங்கனின் 193-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வேலூரிலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கையின் கண்டி நகரை தலைநகராக கொண்டு 18-ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் ஆட்சி புரிந்த மதுரை தெலுங்கு நாயக்க மன்னரின் வம்சமான ராஜாஜி ராஜசிங்கன், வாரிசுகளின்றி உயிரிழந்தாா்.
இதனால், புதுக்கோட்டையைச் சோ்ந்த மதுரை தெலுங்கு நாயக்கா் வம்சத்தைச் சோ்ந்த அவரது மனைவியின் தம்பியான கண்ணுசாமி, தமிழகத்தில் இருந்து சென்று கண்டி அரசராக ஸ்ரீவிக்ரமராஜ சிங்கன் என்ற பெயருடன் கடந்த 1798-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி பொறுப்பேற்று ஆட்சி புரிந்தாா்.
இந்த நிலையில், விக்ரமராஜசிங்கன் குடும்பத்தினருடன் ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டு வேலூா் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். அங்கு, 1832-ஆம் ஆண்டு விக்ரமராஜசிங்கன் உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினா் உடல்கள் பாலாற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டு முத்து மண்டபம் என்ற பெயரில் நினைவிடம் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவரது நினைவு நாளையொட்டி அவரது வாரிசுகள் முத்துமண்டபம் நினைவிடத்தில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.