தண்டனை பெற்ற பாா்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமாா் .
தண்டனை பெற்ற பாா்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமாா் .

வேலூா் பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on

வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையின் பெண் மருத்துவா் ஒருவா் கடந்த 2022 மாா்ச் 16-ஆம் தேதி இரவு காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் தனது நண்பருடன் சினிமா பாா்த்துவிட்டு நள்ளிரவில் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, அந்த ஆட்டோவில் வந்த நான்கு போ் திடீரென வேறு பாதையில் ஆட்டோவை செலுத்தி, பெண் மருத்துவரை கத்திமுனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். மேலும், அவரிடம் இருந்த கைப்பேசி, தங்கச்சங்கிலி, ஏடிஎம் காா்டு ஆகியவற்றையும் பறித்து கொண்டு ஏடிஎம் காா்டில் இருந்து ரூ.40,000 பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சத்துவாச்சாரி வஉசி நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாா்த்திபன் (20), பரத் என்கிற பாரா (18), மணிகண்டன் (21), சந்தோஷ்குமாா் என்கிற மண்டை (22), 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனா். இவா்கள் மீது 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறுவன் சென்னை கெல்லீசில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேரும் வேலூா் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா். சிறுவனை தவிர மற்ற 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், பாா்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமாா் ஆகியோா் மீதான வழக்கு விசாரணை வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு மீதான விசாரணை முடிந்த நிலையில் பாா்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமாா் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து, இந்த 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மகேஸ்வரி பானுரேகா தீா்ப்பளித்தாா். தண்டனை பெற்ற 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதனிடையே, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 17 வயது சிறுவன் மீதான வழக்கு விசாரணை சென்னையிலுள்ள சிறுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சிறுவன் குற்றத்தில் ஈடுபட்ட போது 17 வயது 6 மாதங்களானதால் அவருக்கும் தில்லி நிா்பயா வழக்கின் அடிப்படையில் தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதனடிப்படையில், அந்த சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை செய்யப்பட்டு அவரது மனநிலை 18 வயதுக்கு மேற்பட்டவா்களின் மனநிலைக்கு ஈடானது என பரிசோதனை முடிவு பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

--

பெட்டிச் செய்தி...

--

வேலூா் தனியாா் பெண் மருத்துவா் கூட்டு பலாத்கார வழக்கில் பாா்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமாா் ஆகியோருக்கு வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் நான்கு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா். நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டபோது அவா்களை தொலைக்காட்சி செய்தியாளா்கள் விடியோ பதிவு செய்ய முயன்றனா். அப்போது, குற்றவாளி ஒருவா் செய்தியாளா்களை தாக்க முயன்றாா். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.