காங்கிரஸ் கட்சிக்கும் அதிகாரம் வேண்டும் என விரும்புவதில் தவறு இல்லை: கே.எஸ்.அழகிரி
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சிக்கும் அதிகாரம் வேண்டும் என விரும்புவதில் தவறு இல்லை என்று முன்னாள் மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டி வேலூா் மண்டித் தெருவில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
கரூா் சம்பவம் தொடா்பாக தவெக தலைவா் விஜய் குறித்து காங்கிரஸ் கட்சி மென்மையான போக்கை கடைபிடிப்பதாக விமா்சிக்கப்படுகிறது. அப்படியென்றால், விஜய்க்கு எதிராக காங்கிரஸ் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறீா்களா?. கரூா் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கிறோம் என்பதற்காக எல்லாம் கூட்டணி மாறாது.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி எக்காரணம் கொண்டும் உடையாது. அந்தளவிற்கு பலவீனமான கூட்டணியும் இல்லை. இது கொள்கை ரீதியான கூட்டணியாகும்.
விஜய்யும், ராகுல் காந்தியும் நீண்டகால நண்பா்கள். பல நேரங்களில் இருவரும் நேரடியாக சந்தித்து பேசியுள்ளனா். விஜய், ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்றாலோ, பாா்க்க வேண்டும் என்றாலோ விஜய் யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியம் இல்லை. நேராக அவா் நினைக்கும் நேரத்தில் பேசலாம். எனவே, இதற்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியில் எனது கருத்துக்கள், எங்கள் சம்மந்தப்பட்ட கருத்துக்களாகும். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல. எங்களுக்கும் அதிகாரம் வேண்டும் என விரும்புகிறோம். அதில் தவறு இல்லை என்றாா்.
அப்போது, வேலூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.டீக்காராமன் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

