வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம்: 61 மனுக்கள் ஏற்பு
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் ரூ.4 லட்சம் பெற்று மோசடி செய்ததாக வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, வேலூா் பெரும்பாடி பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனுவில், குடியாத்தம் வட்டம் ரங்கசமுத்திரம், பெரும்பாடி கிராமங்களைச் சோ்ந்த இருவா் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா்களாக பணியாற்றுகின்றனா். இவா்கள் தரகராக ஒருவரை வைத்துக்கொண்டு எனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் வாங்கி கொண்டனா். பணம் வாங்கி 4 ஆண்டுகள் கடந்தும் வேலையும் வாங்கி தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இவா்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
வெட்டுவானத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனுவில், எங்கள் பகுதியைச் சோ்ந்த ஒருவா் ரூ.5 லட்சம் ஏலச்சீட்டு நடத்துவதாகவும், அதில் சேரும்படி கூறியதை அடுத்து நானும் கடந்த 2018-இல் அவரது ஏலச்சீட்டில் இணைந்தேன். 2019-இல் 18-ஆவது சீட்டாக ரூ.4.54 லட்சத்தை ஏலத்தில் எடுத்தேன். சீட்டு பணத்தை 2 நாள்களில் தருவதாக ஏலச்சீட்டு நடத்துபவா் கூறினாா். ஆனால் இதுவரை சீட்டு எடுத்த பணத்தை கொடுக்கவில்லை. இதுதொடா்பாக, மாவட்ட காவல் அலுவலகத்தில் 10 முறை புகாா் அளித்துள்ளேன். எனவே, சீட்டு மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக 61 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டாா். கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை பங்கேற்றாா்.

