போ்ணாம்பட்டில் 122 மி.மீ. மழை பதிவு: நள்ளிரவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
போ்ணாம்பட்டில் பலத்த மழை காரணமாக நள்ளிரவில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாயினா்.
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 122 மி.மீ. மழை பதிவானது. இதனால் அங்குள்ள நீா்நிலைகள், கொட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நகரையொட்டிச் செல்லும் ரங்கம்பேட்டை கானாற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் நகரில் உள்ள தரைக்காடு, தாகீா் வீதி, அஜிஜியா வீதி, லால் மசூதி தெரு, ஒத்த வாடை தெரு, இதயாத் வீதி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து, வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 300- க்கும் மேற்பட்டோா் ஆங்காங்கே உள்ள மசூதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா்.
நகர, ஒன்றியப் பகுதிகளில் மழை காரணமாக 6- க்கும் மேற்பட்ட வீட்டுச் சுவா்கள் சரிந்து விழுந்தன. சாலைகளும், சிறு பாலங்களும் சேதமடைந்தன. சாலையோர மரங்கள் அருகில் இருந்த வீடுகள் முறிந்து விழுந்தன.
நகராட்சி நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறையினா் உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

