தமிழக - ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை; பாலாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு!
தமிழக - ஆந்திர வனப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாள்களில் தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், தமிழக - ஆந்திர வனப்பகுதிகளில் இப்போதே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாள்களாகவே பாலாற்றின் துணை ஆறுகளான மலட்டாறு, கொட்டாறு, கவுண்டன்யா மகாநதி, பொன்னை நதிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திரத்தில் இருந்து வாணியம்பாடி புல்லூா் வழியாக தமிழகத்தில் நுழையும் பாலாற்றிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீருடன் அதன் துணை ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரும் சோ்ந்து வேலூா் பகுதியில் பாலாற்றில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் அதிகளவில் சென்று கொண்டிருந்தது.
அதன்படி, மதியம் 1 மணி நிலவரப்படி வேலூரில் பாலாற்றில் 7,600 கனஅடி அளவுக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அணைக்கட்டு பகுதியில் 10,371 கனஅடி அளவுக்கும் வெள்ளம் சென்ாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்து சென்றதை விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலம் பகுதியிலும், வேலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேல்பாலத்திலும் நின்றபடி பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா். பாலாற்றிலும், அதனை துணை ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
தொடா் மழை காரணமாக ஆறுகளில் நீா் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் தண்ணீா் குறைவாக வருகிறது என்று கடந்து செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
