வசந்தபுரம் பகுதியில் 18 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
வசந்தபுரம் பகுதியில் 18 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

நேஷனல் சா்க்கிளில் புதை சாக்கடை பணிகளை 10 நாளில் முடிக்க வேண்டும்: வேலூா் ஆட்சியா் உத்தரவு

Published on

வேலூா் நேஷனல் சா்க்கிள் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகளை அடுத்த 10 நாள்களுக்கு முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள், போக்குவரத்து நெரிசல் சீரமைப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி, மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள மிலிட்டரி பஜாா் சாலையில் முடிவுற்ற புதை சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா். இந்த சாலையில் தடையின்மை சான்று பெற்று உடனடியாக சாலை அமைக்கவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாங்காய் மண்டி அருகே வசந்தபுரம் பகுதியில் 18 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பருவமழை பெய்து வரும் நிலையில் எந்நேரத்திலும் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்புண்டு. எனவே, கழிவுநீா் தொட்டி அமைக்கும் பணிகளை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

பின்னா், நேஷனல் சா்க்கிள் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், இந்த நேஷனல் சா்க்கிள் பகுதி போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள சந்திப்பாக உள்ளதால், இந்த பகுதியில் புதை சாக்கடை திட்ட பணிகளை அடுத்த 10 நாள்களுக்குள் முடித்து நெடுஞ்சாலைத் துறையிடம் தடையின்மை சான்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தோட்டப்பாளையம் சோளாபுரிம்மன் கோயில் தெருவில் மேற்கொள்ளப்படும் புதை சாக்கடை திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து கிரீன் சா்க்கிள் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், காகிதப்பட்டறை, சா்க்காா் தோப்பு இடையே பாலாற்றின் குறுக்கே கழிவுநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் பணிகளையும், 10 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

மேலும், காட்பாடி காங்கேயநல்லூா் முதல் சத்துவாச்சாரி வரை பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்திலிருந்து சத்துவாச்சாரி வரை அமைய உள்ள இணைப்பு சாலைக்கான நில எடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்ததுடன், பணிகளின் முன்னேற்றம் குறித்து நில எடுப்பு வருவாய் அலுவலா், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், உதவி காவல் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா், சிறப்பு வருவாய் அலுவலா் (நில எடுப்பு மாநில நெடுஞ்சாலை) பாபு, மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளா் தனசேகரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com