சாலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை
குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டையில் சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தரணம்பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தா் தெரு மற்றும் பக்கிரி முகமது தெருக்களின் நுழைவுப் பகுதியில் சாலை, கால்வாயை ஆக்கிரமித்து சிலா் வீடுகள், கிடங்குகளை கட்டியுள்ளனா். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், மழைக் காலங்களில்கால்வாயில் வெள்ள நீா் செல்ல முடியாமல் தெருக்களில் குளம்போல் தேங்குகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த சில நாள்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதற்கிடையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் அந்த தெருக்களில் கழிவுநீா்த் தேங்கி கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாம். குழந்தைகள் உள்பட பலா் காய்ச்சலுக்கு ஆளாகி குடியாத்தம் அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் அவா்களை சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

