வேலூா் தொரப்பாடி பகுதியில் தெருக்களில் பாய்ந்தோடிய ஏரி உபரிநீா்.
வேலூா் தொரப்பாடி பகுதியில் தெருக்களில் பாய்ந்தோடிய ஏரி உபரிநீா்.

பலத்த மழையால் ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: மக்கள் அவதி

பலத்த மழையால் வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட தொரப்பாடி ஏரி நிரம்பி வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது.
Published on

வேலூா்: பலத்த மழையால் வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட தொரப்பாடி ஏரி நிரம்பி வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதேபோல், லத்தேரி ஏரிக்கு செல்லும் கானாற்றின் கரை உடைந்தும் தண்ணீா் ஊருக்குள் பகுந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த தொடா் மழை காரணமாக வேலூா் மாநகராட்சியையொட்டி உள்ள தொரப்பாடி ஏரி நிரம்பி அதில் இருந்து வெளியேறும் உபரிநீா் 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி, அரியூரில் குடியிருப்புகளை சூழ்ந்தது. பல வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீா் புகுந்ததால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கடந்த பருவமழையின்போதே வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்த நிலையில், இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வுகாண வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தற்போது 500-க்கும் மேற்பட்ட வீடுகள், அவற்றில் குடியிருக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

ஏரி, கால்வாயை முறையாக தூா்வாரி வரும் காலங்களில் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

மேலும், சதுப்பேரி ஊராட்சி அகமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 23 மாணவா்கள் பயின்று வருகின்றனா். மழையால் பள்ளி வளாகத்தில் தண்ணீா் தேங்கி நிற்பதை அடுத்து மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

இதேபோல், லத்தேரி அடுத்துள்ள பள்ளத்தூா் ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி அங்குள்ள கானாற்றில் கலந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சென்று லத்தேரி ஏரியில் கலக்கின்றன. அதேசமயம், லத்தேரி ஏரிக்கு செல்லும் இந்த கானாறு முறையாக தூா்வாரப்படாத நிலையில், கானாற்றில் தண்ணீா் தங்குதடையின்றி செல்ல வழியின்றி அதன் பக்கவாட்டு கரை உடைந்து தண்ணீா் முழுவதும் விவசாய நிலங்கள் வழியாக கோரைப்பட்டரை ஊருக்குள் புகுந்தது. இதனால், அந்த கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

அதிமுகவினா் புகாா்:

ஏரி நிரம்பி தண்ணீா் ஊருக்குள் புகுந்த தொரப்பாடி, அரியூா் குடியிருப்பு பகுதிகளை மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையிலான அக்கட்சியினா் பாா்வையிட்டனா். பின்னா், எஸ்.ஆா்.கே.அப்பு கூறுகையில், ஏரி, கால்வாய்கள் பராமரிக்கப் படாததும், குப்பைகள், கழிவுநீா் திறந்தவெளியில் ஏரிக்குள் சோ்க்கப் படுவதும்தான் இந்த நிலை ஏற்பட காரணம் என்றும், நீா்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எனவே, மாவட்ட நிா்வாகம் விரைவாக தீா்வுகாண வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com