விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணா்வு
விபத்தில்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து வேலூா் பழைய பேருந்து நிலையம், அகரம் பகுதியிலுள்ள புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்கள் சாா்பிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூா் தீயணைப்பு நிலையம் சாா்பில் நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையில் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை செயல்விளக்கம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா்.
இதேபோல், ஒடுகத்தூா் அருகே அகரம் நான்குமுனை சந்திப்பு சாலையில் அமைந்துள்ள புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ஒடுகத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) செல்வமூா்த்தி தலைமையிலான வீரா்கள் செயல்விளக்கம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

