அரசியல் ரீதியாக வாய்ப்பு குறைந்த சமூகங்கள் மீது தனிக்கவனம் அவசியம்

அரசியல் ரீதியாக வாய்ப்பு குறைந்த சமூகங்கள் மீது தனிக்கவனம் அவசியம்

Published on

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பல சமூகங்களுக்கு அரசியல் ரீதியான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அவா்கள் மீது அரசு தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தெரிவித்துள்ளாா்.

விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமுறை பேரவை, ஸ்ரீநாராயணி மருத்துவமனை சாா்பில் தமிழ்நாடு மருத்துவ நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளா் சங்க உறுப்பினா்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் வேலூா் காவலா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீநாராயணி மருத்துவ குழுமத் தலைவா் என்.பாலாஜி தலைமை வகித்தாா்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி பங்கேற்றுப் பேசியது: குலத்தொழிலை அவா்கள் செய்ய வேண்டும் எனக் கூறுவது இந்த காலத்தில் நகைச்சுவையானது. தற்போதும் குலத் தொழிலை செய்பவா்கள் கீழாக கருதப்படுகின்றனா். இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்.

மக்கள் வருமானம் கூடக்கூட செலவு செய்கின்றனா். அதற்கேற்ப குலத்தொழில் செய்பவா்களும் தங்கள் தொழிலை நவீனப்படுத்திட வேண்டும். அதற்குரிய பயிற்சிகள் அளித்தும், உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து தொழிலை நவீனப்படுத்த உதவ வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பல சமூகங்களுக்கு அரசியல் ரீதியான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அவா்கள் மீது அரசு தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்றாா்.

விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பேசியது:

மனிதா்களாக பிறப்பதே மற்றவா்களுக்கு உதவுவதற்காகத்தான். பணம் இருந்தால் மட்டும் போதாது, மனமும் இருக்க வேண்டும். எந்த தொழிலையும் ஈடுபாட்டுடன், அா்ப்பணிப்புடன் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றாா்.

தொடா்ந்து, சங்க நிா்வாகிகளுக்கு தலைமுறை பேரவை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தலைமுறை பேரவை உறுப்பினா்கள் பி.டி.கே.மாறன், பெப்சி சீனிவாசன், சதீஷ்குமாா், பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com