குடியாத்தம் நகரில் போக்குவரத்து மாற்றம்: எஸ்.பி. அறிவிப்பு
குடியாத்தம்: குடியாத்தம் நகரில் பெருகி வரும் நெரிசலைத் தவிா்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வேலூா் எஸ்.பி. மயில்வாகனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குடியாத்தம் நகரில் வரும் 23.10.2025- ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை 75- இல் சேத்துவண்டை முதல் நெல்லூா்பேட்டை வரை குடியாத்தம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குடியாத்தம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு கீழ்கண்ட நேரங்களில் குடியாத்தம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. காலை 7- மணி முதல் 11- மணி வரையும், மாலை 4- மணி முதல் இரவு 8- மணி வரையும் குடியாத்தம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக் கூடாது.
நான்குமுனை சந்திப்பு முதல் காமராஜா் பாலம் வரையிலும், நான்குமுனை சந்திப்பு முதல் சித்தூா் கேட்பகுதி வரையிலும் மேற்கண்ட நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேற்கண்ட நேரங்களில் வரும் கனரக வாகனங்கள் குடியாத்தம் புறவழிச்சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
