வேலூா் மாவட்டத்துக்கு ரூ.50 கோடி கடன் இலக்கு: ஆட்சியா் தகவல்
வேலூா் மாவட்டத்துக்கு ரூ.50 கோடி கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
வேளாண் உள்கட்டமைப்பு குறித்த ஒருநாள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.
இதில், வேளாண்மை அதிகாரிகள் பேசுகையில், வேளாண்மை வளா்ச்சிக்கு தேவையான அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதி (ஏஐஎஃப் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதி திட்டத்தின் மூலம் பிணையற்ற குறைந்த வட்டியிலான கடனுதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 13 ஆண்டுகளில் (2020-21 முதல் 2032-33 வரை) வங்கிகள் மூலம் ரூ.ஒரு லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், மாநில இலக்கு ரூ.5,990 கோடி யாகும். இந்த நிதி திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, அதிகபட்சமாக 9 சதவீத வட்டியில் 7 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டிக்கழிவு வழங்கப்பட உள்ளது.
அறுவடைக்குப்பிந்தைய வேளாண்மைக்கான அனைத்து உள்கட்டமைப்புகளுக்கும், அதாவது சேமிப்பு கிடங்குகள், சேமிப்பு கலன்கள், முதன்மைபதப்படுத்தும் மையங்கள் அமைக்க கடன் பெறலாம்.
இதர மாநில, மத்திய அரசு திட்டங்களான பிஎம்எப்எம்இ, பிஎம்இஜிபி, பிஎம்கேயுஎஸ்யுஎம் போன்ற திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளும் இத்திட்டத்தின்கீழ் வட்டி சலுகை பெறலாம். அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் இத்திட்டத்தின்கீழ் கடன் பெறலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், தொழில் முனைவோா்கள் ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ண்ய்ச்ழ்ஹ.க்ஹஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விரிவான திட்ட அறிக்கையுடன் வேளாண் தொழில் முனைவோா்கள் தாங்கள் விரும்பும் வங்கிக்கிளைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றனா்.
ஆட்சியா் பேசியது: நபாா்டு வங்கி, வேளாண் பொறியியல் துறை சாா்பில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தா்மபுரி, திருவள்ளூா் ஆகிய 6 மாவட்டங்களை சோ்ந்த விவசாயிகளுக்கான வேளாண் உள் கட்டமைப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், வேளாண் நவீன மயமாக்கல் குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
ஒரு விவசாயியின் வாழ்வாதாரம் நன்றாக இருந்தால் சிறந்த பொருளாதாரமாக விளங்கும். விவசாய விளைபொருள்களுக்காக வங்கிகளின் சாா்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. வேலூா் மாவட்டத்துக்கு ரூ.50 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், வேலூா் மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமணி, வேளாண் பொறியியல் செயற்பொறியாளா் ராஜேஷ், வேளாண் வணிகம், விற்பனை துணை இயக்குநா் கலைச்செல்வி, நபாா்டு உதவி பொது மேலாளா் ஸ்ரீபாதராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

