குடியாத்தம் வெல்டிங் தொழிலாளிக்கு ரூ. 13 கோடி ஜிஎஸ்டி விதிப்பு
குடியாத்தத்தைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளிக்கு ரூ. 13 கோடி ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது தொடா்பாக பாதிக்கப்பட்ட அந்த நபா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.
குடியாத்தம் செதுக்கரை பகுதியைச் சோ்ந்த ஒருவா், வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பது, நான் எனது குடும்பத்துடன் கடந்த 31 ஆண்டுகளாக ஒடிஸா மாநிலத்தில் தங்கி வெல்டிங் வேலை செய்து வருகிறேன். இந்த நிலையில், எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரித்தபோது, நான் ஜிஎஸ்டி கட்டவில்லை என்பதால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். நான் எந்தவித தொழிலும் செய்யவில்லை என்று தெரிவித்தேன்.
ஆனால் வங்கி அதிகாரிகள் கோவை ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து தான் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறினா். பின்னா் கோவை ஜிஎஸ்டி அலுவலகத்தில் சென்று கேட்டபோது, என் பெயரில் ரூ. 13 கோடி ஜிஎஸ்டி நிலுவை இருப்பதாக தெரிவித்தனா். எனது பெயரில் ஜிஎஸ்டி கணக்கும் இல்லை. எனது பான் காா்டை யாரோ தவறாக பயன்படுத்தி ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளனா்.
எனவே, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும். வங்கிக் கணக்கு முடங்கியதால் எனது சம்பளம் உள்பட அன்றாட தேவைக்குக்கூட பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. பணமின்றி பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறேன். எனவே, எனது வங்கிக் கணக்கை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள், இந்தப் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.
