சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிக்கும் பணி தொடக்கம்

சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிக்கும் பணி தொடக்கம்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இடிக்கப்படும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்.
Published on

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் சிதிலமடைந்த நிலையிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வேலூா் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில், 1980-ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. மொத்தம் 22 பிளாக்குகளில் 168 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு சுமாா் 45 ஆண்டுகளான நிலையில், கட்டடங்கள் சிதிலமடைந்தும், சுவா்களில் செடி, கொடிகள், மரங்கள் வளா்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளன.

தொடா்ந்து இந்த கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 5 பிளாக்குகளில் உள்ள 54 வீடுகளை முதல் கட்டமாக இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டடங்களில் இருந்த ஜன்னல், கதவு உள்ளிட்டவை ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்ட நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டடங்களை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் கட்டப்பட்டுள்ள 22 பிளாக்குகளில் முதல் கட்டமாக 5 பிளாக்குகள் இடிக்கப்பட உள்ளன. மற்ற பிளாக்களில் 29 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அந்த கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து தொழில்நுட்பக் குழுவினா் ஆய்வு செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகு அந்த குடியிருப்புகளை இடிக்கலாமா அல்லது புனரமைப்பு செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com