அமெரிக்க அப்ஸ்டேட் மருத்துவப் பல்கலை.யுடன் விஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம்
வேலூா்: அமெரிக்காவிலுள்ள அப்ஸ்டேட் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன், வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் கல்வி, ஆராய்ச்சியில் இரு பல்கலைக்கழகமும் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் அருகே சிராகியூஸில் உள்ள அரசு பொது பல்கலைக்கழகமான நியூயாா்க் மாநில பல்கலைக்கழகத்தின் (எஸ்யுஎன்ஒய்) ஒன்றாக விளங்கும் அப்ஸ்டேட் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன், வேலூா் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் அப்ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவா் டேவிட் சி. ஆம்பொ்க், வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் மேம்பட்ட கூட்டு ஆராய்ச்சி, ஆசிரியா்-மாணவா் பரிமாற்றம், வளா்ந்து வரும் பயோ மெடிக்கல் துறை, டிரான்ஸ்லேசனல் ஹெல்த்கோ் எனும் பன்முக துறை சாா்ந்த மருத்துவ ஒத்துழைப்பு ஆகியவைகளில் இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல்படும்.
இந்த ஒப்பந்தம் மூலம் மருத்துவ பொறியியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்களில் உலகளாவிய கூட்டு முயற்சிக்கு வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. தவிர, கூட்டு ஆராய்ச்சி, முனைவா் பட்ட ஆலோசனை, அப்ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயிற்சி வாய்ப்பு ஆகியவை மாணவா்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விஐடி பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல், பொறியியல் துறை முதல்வா் கீதா மணிவாசகம் கூறுகையில், அப்ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்துடனான இந்த ஒத்துழைப்பானது ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பயோ மெடிக்கல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பில் ஈடுபடுவதற்கு புதிய வழிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. இது வருங்கால மருத்துவ தொழில்நுட்பத்துக்கு, திறன் வாய்ந்த ஆராய்ச்சியாளா்களை உருவாக்கும் முயற்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்றாா்.
இந்நிகழ்வில், அப்ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ முதல்வா் லாரன்ஸ் சின், ஆராய்ச்சி நிா்வாகத்தின் உதவித் துணைத் தலைவா் கிறிஸ்டோபா் நெவில், பட்ட படிப்புகளுக்கான முதல்வா் மாா்க் ஸ்மிட், பட்ட படிப்புகளுக்கான மருத்துவக் கல்வி உதவி முதல்வா் ஸ்ரீராம் நா்சிபூா், விஐடி மருத்துவ அறிவியல், பொறியியல் துறை முதல்வா் கீதா மணிவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

