Enable Javscript for better performance
தலித்துகள் ஒன்றிணைய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே- Dinamani

சுடச்சுட

  

  தலித்துகள் ஒன்றிணைய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

  By பெங்களூரு  |   Published on : 15th April 2016 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தலித் மக்கள் ஒன்றுபட்டால்தான் அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

  கர்நாடக அரசு சார்பில், பெங்களூரு விருந்தினர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் பேசியது:

  ஒருகாலத்தில் அடிமைகளாக வாழ்ந்த தலித் மக்கள், தற்போது அனைவருடனும் சுயமரியாதையுடன் வாழ்வது ஒருசிலரின் கண்களை உறுத்துகிறது. அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

  தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் சுயமரியாதை உணர்வு மேலோங்கி இருப்பவர்கள் என்பதை யாரும் மறக்கக் கூடாது. தலித் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலை மிகவும் பின்தங்கியுள்ளதை யாராலும் மறுக்க இயலாது.

  தலித் மக்கள் ஒன்றுபட்டு நின்றால்தான் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தலித் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். முதல்வர் சித்தராமையா போன்ற தலைவர்கள் தலித் மக்களின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை நல்கிவருகின்றனர்.

  2016-17-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தலித் மக்களின் வளர்ச்சிக்கு மொத்த பட்ஜெட் தொகையில் 24.1 சத நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். தலித் மக்களின் மேம்பாட்டில் சித்தராமையா மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்.

  மாவட்ட மற்றும் வட்ட ஊராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க ஒருசிலர் சதி திட்டம் தீட்டி வருகின்றனர். ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

  இதனால் தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் பறிபோகும் வாய்ப்புள்ளது. தலித் மக்களில் 50 சதத்திற்கும் மேற்பட்டோர் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்தால் தலித் மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாத நிலை உருவாகும்.

  மகாராஷ்டிரத்தில் உள்ள சனிபகவான் கோயிலுக்குள் போராட்டம் நடத்தி பெண்கள் உள்ளே நுழைந்துள்ளனர். நாமும் சமூக ஏற்றத்தாழ்வு என்ற சனியால் அவதிப்பட்டு வருகிறோம். தலித் மக்களாகிய நாம் நமது உரிமைகளை மீட்டெடுக்க போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை.

  அம்பேத்கர், தலித் மக்களுக்கும் சொந்தமான தலைவர் அல்ல. சுதந்திர இந்தியாவில் செல்வந்தர்களுக்கு மட்டும் வாய்த்த வாக்குரிமையை அனைவருக்கும் அளித்தவர் அம்பேத்கர் என்றார்.

  முன்னதாக, 2016-ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.அம்பேத்கர் விருதை சின்னசாமி மாம்பள்ளிக்கு வழங்கி முதல்வர் சித்தராமையா கெளரவித்தார். விழாவில் மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி, அமைச்சர்கள் மகாதேவப்பா, எச்.ஆஞ்சநேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai