அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றது ஏன்?: அன்புமணி விளக்கம்

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான இலக்கை அடைவதற்காகவே,  அதிமுக-பாஜக கூட்டணியில் தங்களது கட்சி சேர்ந்துள்ளதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான இலக்கை அடைவதற்காகவே,  அதிமுக-
பாஜக கூட்டணியில் தங்களது கட்சி சேர்ந்துள்ளதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம்,  வானூர் அருகே பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசியதாவது: 
பாமகவின் தேர்தல் கூட்டணி முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். நமது நோக்கம் தமிழகம் முன்னேற வேண்டும். பதவிக்கு வருவதன் மூலம்தான் நமது இலக்கை எட்ட முடியும்.  புகையிலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தோம். பதவிக்கு வந்த பிறகே பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று ஆணையிட முடிந்தது.
2011-ஆம் ஆண்டு தனித்துப் போட்டி என முடிவெடுத்து அதை தைரியமாகச் செயல்படுத்தினோம். இந்த தைரியம் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் இல்லை. பூரண மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தினோம்.  இதனை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.  
பாமக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்து கடந்த காலங்களில் தேர்தலைச் சந்தித்தோம். 6 சதவீத வாக்குகள் கிடைத்தன. நமது இலக்கை அடைய சூழலுக்கேற்ப வியூகங்களை அமைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான், தற்போதைய கூட்டணி முடிவை எடுத்துள்ளோம்.  
பாமக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துதான் அதிமுக கூட்டணியில் இணைந்தது. 
அதிமுகவுடன் இணைந்து, இந்தக் கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தால்,  மத்திய அரசு நிறைவேற்றும் என்றார் அன்புமணி ராமதாஸ்.
தீர்மானங்கள்:  தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக-பாமக-பாஜக கூட்டணி வெற்றிபெற மூன்று மடங்கு உழைக்க வேண்டும்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும்,  தமிழகத் திட்டங்களை அதிக எண்ணிக்கையில் போராடிப் பெறவும், பாமகவுக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புவது அவசியம் என்பதால்,  ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜகவும் இணைந்துள்ளது.
கூட்டணிக்கான முன்நிபந்தனையாக காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நீர்ப்பாசனத் திட்டங்கள்,  சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 7 தமிழர்கள் விடுதலை, படிப்படியாக மது விலக்கை ஏற்படுத்தும் நோக்கில் 500 மதுக் கடைகளை மூடுதல், மணல் குவாரிகளை படிப்படியாக மூடுதல், மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடித்தல், பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்தல், மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய,  மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com