உளுந்தூர்பேட்டை அருகே குளத்தில் கிடந்த பண பாதுகாப்புப் பெட்டகம்
By DIN | Published On : 05th July 2019 08:29 AM | Last Updated : 05th July 2019 08:29 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கோயில் குளத்தில் பண பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று உடைக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை கிடந்தது. இதை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே பெரியசெவலை கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் குளத்தில் வியாழக்கிழமை காலை இரும்பு பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யனார் தலைமையிலான போலீஸார், அங்கு விரைந்து சென்று பெட்டகத்தை சோதனையிட்டனர்.
அந்த பெட்டகத்தினுள் ரூ.2,000, ரூ.10 நோட்டுகள் தலா ஒன்றும், ரூ.30 சில்லறைக் காசுகளும், பித்தளையால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றும் இருந்தன.
இந்த பாதுகாப்புப் பெட்டகம் வங்கி, அடகுக் கடைகள், நிதி நிறுவனங்கள், பெரிய கடைகள், பெரும் வணிகர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுவது போன்று இருந்தது. ஆகையால், இந்தப் பெட்டத்தை வங்கி அல்லது
அடகுக் கடையிலிருந்து மர்ம நபர்கள் திருடி உடைத்து, அதிலிருந்த பணம், பொருள்களை எடுத்துவிட்டு பெட்டகத்தை மட்டும் குளத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர்.
மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணப் பாதுகாப்புப் பெட்டகம் ஏதேனும் திருடப்பட்டதா என்றும் போலீஸார் விசாரித்தனர். ஆனால், அந்தப் பகுதியில் இதுபோன்ற திருட்டுச் சம்பவம் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து, அந்த பாதுகாப்புப் பெட்டகத்தை போலீஸார் கைப்பற்றி, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.