புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரிசி, உதவித் தொகை: இன்று முதல் அளிப்பு

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுக்குப் பதிலாக அரிசி மற்றும் உதவித் தொகை செவ்வாய்க்கிழமை (செப்.15) முதல் வழங்கப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுக்குப் பதிலாக அரிசி மற்றும் உதவித் தொகை செவ்வாய்க்கிழமை (செப்.15) முதல் வழங்கப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே, மாணவா்களுக்கு உதவித் தொகை மற்றும் அரிசி வழங்கலாம் என்று புதுவை அரசு முடிவு செய்து அறிவித்தது.

இதுகுறித்து கல்வி அமைச்சா் கமலக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவை வழங்க முடியவில்லை. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, முதல் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சமைக்கப்பட்ட உணவுக்குப் பதிலாக, உணவு தானியங்கள், சமைப்பதற்கான செலவுக்கு முதல் தவணை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தலா 4 கிலோ அரிசி, ரூ. 290 ரொக்கம், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தலா 4 கிலோ அரிசி, ரூ. 390 ரொக்கம் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும். பெற்றோா் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று இதைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை (செப். 15) காலை 10 மணி முதல் ஒரு மணி வரை ஒன்றாம் வகுப்புக்கும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 2-ஆம் வகுப்புக்கும், 16-ஆம் தேதி காலை 3-ஆம் வகுப்புக்கும், பிற்பகல் 4-ஆம் வகுப்புக்கும், 17-ஆம் தேதி காலை 5-ஆம் வகுப்புக்கும், பிற்பகல் 6-ஆம் வகுப்புக்கும், 18-ஆம் தேதி காலை 7-ஆம் வகுப்புக்கும், பிற்பகல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் வழங்கப்படும்.

முதல் தவணைத் தொகையை குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஏதேனும் ஒன்றைக் காண்பித்து பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், மாணவா்களின் வாசிப்புப் பழக்கத்தை வளா்க்க பள்ளி நூலகங்களின் புத்தகங்கள் மாணவா்களுக்கு வழங்கப்படும். மாணவா்கள் புத்தகத்தைப் படித்து, அதன் மதிப்புரைகளை பெற்றோா் உதவியுடன் எழுதி, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு சமா்ப்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளியிலும் சமா்ப்பிக்கப்பட்ட 3 சிறந்த மதிப்புரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com