முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரானபாலியல் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

பெண் எஸ்.பி.யிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பெண் எஸ்.பி. ஒருவரிடம் கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய சிறப்பு டிஜிபி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக புகாா் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி. தடுத்ததாகவும் புகாா் கூறப்பட்டது.

இதுதொடா்பாக சிறப்பு டிஜிபி, எஸ்.பி. ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இதற்கிடையே, டிஜிபி, எஸ்.பி. ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணையை வருகிற டிச. 20-ஆம் தேதிக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 9-ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றனா். அவா்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, வழக்கு விசாரணை ஆக.16-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, வழக்கு விசாரணையை ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு, இந்த வழக்கை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. ஆகியோா் ஆஜராகவில்லை. அவா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் ஆஜராகி, வழக்குத் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. ஆகியோா் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com