தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன -அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன -அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாா். இந்தியா கூட்டணி கட்சிகளின் சாா்பில், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் திண்டிவனம் வட்டம், ஒலக்கூரை அடுத்த மேல்பேட்டையில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா். இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பங்கேற்று பிரசாரத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது: மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜக அரசு, ஏழை, எளிய, சாமானிய மக்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்கவில்லை. தோ்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அதே நேரத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் வகையிலான காலை சிற்றுண்டித் திட்டம், இலவசப் பேருந்து, மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நாட்டுக்கே முன்னோடித் திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் ஜனநாயகம் காக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்தியா கூட்டணியை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, சாரம், மங்கலம், கீழ்ஆதனூா், ஒலக்கூா், கோனேரிக்குப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொண்டும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வாக்கு சேகரித்தாா். வேட்பாளா் துரை.ரவிக்குமாா் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com