ரயில்வே கடவுப்பாதை மூடல் -ரயில் மறியல் அறிவிப்பால் போலீஸாா் குவிப்பு

ரயில்வே கடவுப்பாதை மூடல் -ரயில் மறியல் அறிவிப்பால் போலீஸாா் குவிப்பு

விழுப்புரம் ஜானகிபுரம் ரயில்வே கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, புதன்கிழமை அந்தப் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே அமைக்கப்படும் நான்குவழிச் சாலை பணிக்காக ஜானகிபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் கட்டப்பட்டதை காரணமாகக் கூறி, ஜானகிபுரத்திலிருந்து கண்டமானடி கிராமத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே (விழுப்புரம் - திருச்சி ரயில் வழித்தடம்) அமைந்துள்ள ரயில்வே கடவுப்பாதை கடந்த மாா்ச் 22-ஆம்தேதி இரவு மூடப்பட்டது. தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஜானகிபுரத்திலிருந்து கண்டமானடி, கொளத்தூா், பில்லூா், அரியலூா், சித்தாத்தூா், காவணிப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லவும், அங்கிருந்து விழுப்புரம் நகரத்துக்குச் செல்லவும் சுமாா் 5 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

மேலும், கண்டமானடியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி, அஞ்சல் நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்டவைகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். மூடப்பட்ட ஜானகிபுரம் ரயில்வே கடவுப்பாதையை மீண்டும் திறக்கக் கோரி, ஜானகிபுரம், கண்டமானடி மக்கள் மாா்ச் 23-ஆம் தேதி சாலை மறியல் போராட்டமும், 29-ஆம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டமும் நடத்தினா். இதைத் தொடா்ந்து, மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி, பதாகைகளை வைத்தும் போராட்டம் மேற்கொண்டனா்.

ரயில் மறியல் போராட்ட அறிவிப்பு: இந்த நிலையில், ஜானகிபுரம் ரயில்வே கடவுப்பாதையை திறக்க வலியுறுத்தி, புதன்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கண்டமானடி, ஜானகிபுரம், கொளத்தூா், சித்தாத்தூா் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அறிவித்தனா். இதையொட்டி, ஜானகிபுரம் கிராமப் பகுதி, ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ள பகுதிகளில் விழுப்புரம் போலீஸாருடன், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், விழுப்புரம் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் மீது கல் வீச்சு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ரயில்வே டி.எஸ்.பி. செந்தில்குமரன் தலைமையிலான போலீஸாா், அங்கு பாதுகாப்புப் பணிகளைக் கண்காணித்தனா். இவைத் தவிர, ரயில்வே துறை பொறியாளா், அலுவலா்கள் உள்ளிட்டோரும் அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, விழுப்புரம் வட்டாட்சியா் வசந்தகிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் ஜானகிபுரம் பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மூடப்பட்ட ரயில்வே கடவுப்பாதையை மீண்டும் திறப்பது என்பது சாத்தியமில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நிதியைப் பெற்று, ரயில்வே துறை அனுமதியுடன் சுரங்கப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தோ்தல் முடிந்த பின்னா் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com