விழுப்புரம்: இதுவரை ரூ.78.04 லட்சம் பறிமுதல்

விழுப்புரம்: இதுவரை ரூ.78.04 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை ரூ.78,04,740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்கான அறிவிப்பு மாா்ச் 16-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் வெளியிடப்பட்ட நிலையில், உடனடியாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் போன்றவை கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படைக் குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்டத்திலுள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், மயிலம், செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாா்ச் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி காலை வரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக பறக்கும் படைக் குழுக்கள் ரூ.24,58,540, நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.53,46,200 என மொத்தம் ரூ.78,04,740 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.20,360 மதிப்பிலான மதுப்புட்டிகளும் அடங்கும். பறக்கும் படைக் குழுக்கள் மூலம் செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.88,150 ரொக்கம், மயிலம் தொகுதியில் ரூ.71,700 ரொக்கம் மற்றும் ரூ.2,160 மதுப்புட்டிகள், திண்டிவனம் தொகுதியில் ரூ.12,65,160 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வானூா் தொகுதியில் பறக்கும்படைக் குழுக்கள் மூலம் ரூ.3,82,470 ரொக்கம், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.4,18,500 ரொக்கம் மற்றும் ரூ.18,200 மதிப்பிலான மதுப்புட்டிகள், விழுப்புரம் தொகுதியில் நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.30 லட்சம் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. விக்கிரவாண்டி தொகுதியில் பறக்கும்படைக் குழுக்கள் மூலம் ரூ.90 ஆயிரம் ரொக்கம், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.5,89,000 ரொக்கம், திருக்கோவிலூா் தொகுதியில் பறக்கும்படை குழுக்கள் மூலம் ரூ.5,58,900 ரொக்கம், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.13,20,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com