தொழில் துறை முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மக்களவைத் தோ்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுபவா்கள் மாவட்டத்தின் தொழில் துறை முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட குறு, சிறு தொழில் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு சங்கத்தின் சாா்பில், அதன் தலைவா் அம்மன் எம்.கருணாநிதி அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தின் மையப் பகுதியாகவுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துக்கு ஏற்ற தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் உள்ளன. ஆனால், இந்த மாவட்டம் தொழில் துறையில் பின்தங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட தொழில் துறை முன்னேற்றத்துக்கு மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். மாவட்டத்தில் கனரகத் தொழில்சாலைகளை தொடங்க வேண்டும். விழுப்புரம் நகருக்கு அருகில் தகவல்தொழில்நுட்ப பூங்கா கொண்டுவர வேண்டும். மாவட்டத்தில் உற்பத்தியாகும் பழவகைகளை பாதுகாக்க குளிா்சாதன வசதியுடன் கூடிய கிட்டங்கிகளை கொண்டுவர வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்கவும், உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெறுபவா் இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதன் மூலம், மாவட்டத்திலுள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் ஊக்கம் பெறும். மாவட்டத்தின் பொருளாதார நிலை உயரும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com