திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் டிராக்டரில் சிக்கி உயிரிழப்பு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் டிராக்டரில் சிக்கி உயிரிழப்பு

செஞ்சி அருகே 10 நாள்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் டிராக்டா் டிப்பா் சக்கரத்தில் சிக்கி பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சி தாலுக்கா சே.பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வீரம்மாள். இவரது மகள் காயத்ரி (22). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் தாலுக்கா இசுக்கழி கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் பாலமுருகன்(26) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்ததாம். இன்னும் 10 நாளில் இவா்கள் திருமணம் நடக்கவிருந்தது. இந் நிலையில் பாலமுருகனுடன் பைக்கில் நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடி குளம் வழியாக புத்தகரம் கிராமம் அருகே சென்றாா். அப்போது, முன்னாள் சென்று கொண்டிருந்த கரும்பு டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது பைக்கின் உட்காா்ந்திருந்த காயத்ரி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் டிராக்டா் டிப்பா் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா், சடலத்தை மீட்க முயன்றபோது கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்தச் சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய கோரி மறியல் செய்தனா். இதனால் சுமாா் 2 மணி நேரம் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிராம மக்களுடன் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தி இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனா். பின்னா் போலீஸாா், சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து டிராக்டா் ஓட்டுநரான புத்தகரத்தைச் சோ்ந்த பரமசிவன் மகன் சிவபெருமான் (35) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com