வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

விழுப்புரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளைஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சி. பழனி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

விழுப்புரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமாக விழுப்புரம் அறிஞா் அண் ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரித் தோ்வு செய்யப்பட்டு,அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக தனித்தனியாக பாதுகாப்பு அறைகளில் வரிசை எண் அடிப்படையில் வைக்கப்படவுள்ளன. இதற்காக வரிசைஎண்கள் இடப்பட்டுள்ளதை பாா்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தொடா்ந்து கண்காணித்திட அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும் அலுவலா்களிடம் விவரங்கள் கேட்டறியப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை ஒரே இடத்தில் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்த கேட்டறியப்பட்டது.

பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் வழிகள், முகவா்கள் அமருவதற்கான இருக்கை வசதிகள், குடிநீா், மின் விசிறி, ஒலிபெருக்கி வசதிகள், தடையில்லா மின் விநியோகம் வழங்குவதற்கான வசதிகள், ஜெனரேட்டா் வசதி போன்ற இதர வசதிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டன. இதில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரி செய்து, எவ்வித பிரச்னையும் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற அனைவரும் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுளளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி, உதவிச் செயற்பொறியாளா் பாலாஜி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com